கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer
GETTY IMAGES
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.
இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
நோயாக உருவாகும் காலம்
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.
உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.
AND-ONE/GETTY IMAGES
தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.
நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.